''நான் சீமான் ஆனது எப்படி?''


சீமான்... கோபத் தமிழன்!

அநீதிக்கு எதிராக அனல் வார்த்தைகள் பேசும் சீமானின் பேச்சு, சுய மரியாதையின் அடையாளம். ஈழத்தின் இன அழிப்புக்கு எதிராக உலகெங்கும் ஒலிக்கும் குரல். சிவகங்கை பக்கத்துக் கிராமத்தில் பிறந்த சீமான், நவீன தமிழ் தேசிய அரசியலுக்குள் நுழைந்தது எப்படி? ''சிவகங்கை அருகில் அரணையூர் என் கிராமம். வானம் பார்த்த பூமியில் மிளகாயும் நெல்லும் பயிரிட்டு வாழும் எளிய வெள்ளாமைக் குடிகள் நாங்கள். உள்ளூர் தொடக்கப் பள்ளியில் பள்ளிப் படிப்பு. எங்கள் ஊரைச் சுற்றி பல்வேறு கிராமிய நாடகங்களும் கூத்துக்களும் நடக்கும். அதைப் பார்த்துவிட்டு வந்து அதேபோல வீட்டில்நடித்துக் காட்டுவேன். அது படிப்படியாக வளர்ந்து, கலை வடிவங்கள் மீது பெரிய ஈர்ப்பு வந்தது. இளையான்குடியில் பள்ளிப் படிப்புக்குப்போன போதும் கலை ஆர்வம் தொடர்ந்தது.

 எல்லாவிதச் சாதிய அடக்குமுறைகளும் உயிர்ப்புடன் இருந்த கிராமத்தில், ஊரின் நடவடிக்கைகள் எனக்குள் ஏராளமான கேள்விகளை உருவாக்கின. கண்மாய்ப் பாசனத்தில் விவசாயம் செய்யும் எங்கள் ஊரில், அதே கண்மாயில்தான் குளிப்பார்கள். கண்மாயின் ஓர் இடத்தில் ஒரு கல் போடப்பட்டு இருக்கும். அங்கு ஒரு சாதியினர் குளிப்பார்கள். கொஞ்சம் தள்ளி வேறொரு இடத்தில் இன்னொரு கல். அங்கு வேறொரு சாதியினர் குளிக்க வேண்டும். இப்படி, சாதிக்கு ஒரு கல் போட்டுக் குளித்த கண்மாய், சாதியின் கொடூரத்தை எனக்குப் போதித்தது. 


இன்னொரு பக்கம், ஊர் எல்லையில் இருந்த காவல் தெய்வத்தை யாரும் திருடிவிடக் கூடாது என்பதற்காக தினமும் கொஞ்சம் பேர் இரவில் காவல் காப்பார்கள். 'மக்களைக் காக்க வேண்டிய காவல் தெய்வத்தையே நாம் காக்க வேண்டியிருக்கிறது என்றால், அப்புறம் என்ன அது காவல் தெய்வம்?' என்று இயல்பாகவே கேள்வி எழுந்தது. இந்தக் கேள்விகள் என்னை பெரியாரிடம் கொண்டுசேர்த்தன. 



இளையான்குடி ஜாஹீர் உசேன் கல்லூரியில் இளங்கலை பொருளாதாரம் படித்தேன். அங்கு அறிமுகமான கார்ல்மார்க்ஸ், வர்க்க அடிப்படையில் இந்தச் சமூகத்தைப் பார்க்கக் கற்றுத்தந்தார். கல்லூரி முடித்ததும் 'சினிமாவுக்குப் போகிறேன்' எனக் கிளம்ப, இரண்டு மூட்டை மிளகாய் விற்ற பணத்தைக் கைச்செலவுக்குத் தந்து என்னைப் பேருந்து ஏற்றிவிட்டார்கள் அப்பாவும் அம்மாவும். சென்னைக்கு வந்து உதவி இயக்குநர் வாய்ப்புத் தேடல்களில் பலகட்டத் தோல்வி அடைந்த நிலையில், 'என்றும் அன்புடன்' இயக்குநர் பாக்கியநாதனைச் சந்தித்தேன். அப்போது அவரும் வாய்ப்பு தேடிக்கொண்டு இருந்தார். தங்குவதற்கு இடம் இல்லாத நிலை யில், பகல் எல்லாம் வாய்ப்புத் தேடிவிட்டு, இரவில் ஏவி.எம். அருகே ஒரு சுடுகாட்டில் படுத்துக்கொள்வோம். இதைப் படிக்கும் தம்பிகள், வாழ்வில் வெற்றி என்பது இவ்வளவு துயரமானதா என எண்ணிவிடக் கூடாது. அது இஷ்டப்பட்டு ஏற்ற கஷ்டம். இலக்கை அடையும்வரை தின வாழ்வின் சுமைகளை ஒருபொருட்டாகக் கருதாதது என் இயல்பு.
பிறகுதான் அப்பா மணிவண்ணனின் தொடர்பு கிடைத்து, அவரிடம் 'அமைதிப் படை', 'தோழர் பாண்டியன்' படங்களில் பணிபுரிந்தேன். 'ராசா மகன்' படத்துக்குக் கதை வசனம் எழுதும்போது, அப்பா பாரதிராஜாவின் தொடர்பு கிடைத்தது. அதன் மூலமாக, 'பசும்பொன்' படத்துக்குக் கதை வசனம் எழுதினேன். அப்போது, அண்ணன் பிரபுவைச் சந்தித்ததுதான் என் திரை வாழ்வின் திருப்புமுனை. அவர் கொடுத்ததுதான் 'பாஞ்சாலங்குறிச்சி' வாய்ப்பு. அதன் மூலம் இயக்குநர் ஆனாலும், என்னால் அடுத்தடுத்து வெற்றிகளைத் தர முடியவில்லை. 'இனியவளே', 'வீரநடை' இரண்டும் தோல்விப் படங்கள் ஆயின. ஆனாலும், மனம் தளராமல் புத்தகங்கள் படித்துக்கொண்டும், உடற்பயிற்சி செய்துகொண்டும் ஏழு வருடங்கள் தன்னம்பிக்கையோடு இருந்தேன். இறுதியாக வந்தது 'தம்பி' திரைப்பட வாய்ப்பு. அது மாபெரும் வெற்றி பெற்றது.
இந்தக் காலகட்டத்தில் எல்லாம் நான் பெரியார் திராவிடர் கழக மேடைகள், மார்க்சிய மேடைகளில் அடக்கப்படும் தமிழர் உரிமைகள் தொடர்பாகவும், தமிழ் இன நலன் சார்ந்தும் பேசத் தொடங்கி இருந்தேன். இலங்கையில் அழிக்கப்படும் தமிழ்ச் சொந்தங்களின் குரலை, உலகம் முழுக்கக் கொண்டுசேர்ப்பது என் கடமை எனக் கருதினேன். இந்தச் சூழ்நிலையில்தான் 'வாழ்த்துக்கள்' படம் முடிந்திருந்த நிலையில், தமிழீழத் தேசியத் தலைவர் பிரபாகரனிடம் இருந்து அழைப்பு வந்தது. என் அரசியல் வாழ்வின் திருப்புமுனைத் தலைவனைச் சந்தித்த தருணத்தை என்னால் மறக்கவே முடியாது. குழந்தையின் சிரிப்பும், போராளியின் கம்பீரமும், தலைவனின் கனிவும் நிரம்பிய மனிதர் தலைவர் பிரபாகரன். அப்போது என் 'வாழ்த்துக்கள்' படம் வெளிவந்து தோல்வி அடைந்திருந்தது. 'நமக்கு எதுக்கு இந்த பூ, கவிதை எல்லாம். அடிக்கணும். திரையிலும் அடிக்கணும், தரையிலும் அடிக்கணும்' என்றார் தலைவர் வெடிச் சிரிப்போடு.
தன் நலம் கருதாத தலைவனைக்கொண்ட ஈழத் தமிழினத்தை, சிங்கள இனவெறியர்களும் இந்திய வல்லாதிக்கமும் சேர்ந்து அழித்தபோது, தமிழர்கள் பதைபதைத்தனர். அப்போது, தமிழ்த் திரை உலகினர் ராமேஸ்வரத்தில் நடத்திய போராட்டத்தில் நான் பேசிய பேச்சு, என்னை உலகம் முழுக்கக் கொண்டுசேர்த்தது. அதற்கு முக்கியக் காரணம், சன் தொலைக்காட்சி, என் 20 நிமிடப் பேச்சை நேரலை செய்ததுதான். பிறகு, எங்கெல்லாமோ கூட்டம் போட்டோம், அழிக்கப்படும் தமிழனைக் காக்க. ஆனால், ஆண்டாண்டு காலமாக ஆண்ட தமிழ்ப் பரம்பரையை நந்திக் கடலோரம் கொத்துக் குண்டுகள் வீசிக் கொன்றார்கள். கேட்க நாதி இல்லை. கேட்ட என்னைத் தூக்கிச் சிறையில் போட்டார்கள். சீமான் பேசினால், அது தங்கள் வாக்கு வங்கியைப் பாதிக்கும் என அச்சப்பட்ட அரசு, என்னை நான்கு முறை கைது செய்து சிறையில் அடைத்தது.
எதிர்ப்பு என்பது தனி நபரிடம் இருந்து வருகிறபோது அது எழும் இடத்திலேயே அடக்கப்படுகிறது. அதை ஒரு கூட்டு நடவடிக்கையாக, இயக் கமாகச் செய்கிறபோது, எதிர்ப்பின் அடர்த்தி இன்னும் கூடுகிறது. அதனால்தான் பறிக்கப்பட்ட தமிழர் நலன்களை மீட்டெடுக்கத் தமிழ் இளைஞர்களின் எழுச்சி இயக்கமாக வரும் மே 18-ம் தேதி மதுரையில் உதயமாகிறது 'நாம் தமிழர்' அரசியல் இயக்கம்.
ஈழப் பிரச்னை மட்டுமல்ல, தமிழ் மக்களின் நலன் சார்ந்த அரசியலே இங்கு வெற்றிடமாக இருக்கிறது. இந்த அரசியல் வெற்றிடத்தைக் கற்றவர்கள் நிரப்ப வேண்டும். இல்லை என்றால், கயவர்கள் நிரப்பிவிடுவார்கள். அதற்கான இயக்கம்தான் 'நாம் தமிழர்'. இது மற்றுமோர் அரசியல் கட்சி இல்லை. மாற்று அரசியல் புரட்சி. எந்த நாளில் நாங்கள் வீழ்ந்தோம் என நினைத்தீர்களோ, அதே நாளில் நாங்கள் எழுகிறோம். வென்றாக வேண்டும் தமிழ். ஒன்றாக வேண்டும் தமிழர். நாம் தமிழர்!''

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

அண்மைய செய்திகள்