‘சைலன்ஸ்’ என்ற வார்த்தையைக்கூட இங்கு சத்தமாகத்தான் சொல்ல வேண்டியிருக்கிறது -நாம் தமிழர் இயக்கத்தலைவர் சீமான். கோஷத்திற்கும் முழக்கத்திற்கும் இருக்கிற வித்தியாசம்தான் சீமானுக்கும் மற்ற தலைவர்களுக்கும் இருக்கிற வித்தியாசம். ஈழ விடுதலைக்கான குரல் மட்டுமல்ல, தமிழினத்திற்கு எந்த ரூபத்திலாவது அவமானம் வந்தால் அதை தட்டிக் கேட்கிற முதல் ஆளாக இருக்கிறார் சீமான். அவருடன் ஒரு சந்திப்பு
உங்கள் மாணவர் பருவம் குறித்து?
சிவகங்கை மாவட்டம் அரணியூர்ங்கறது என்னோட ஊரு. என்னுடைய பால்ய பருவமும் அங்குதான். நான் தொடக்கக் கல்வியை அரணியூர்லேயே 5ம் வகுப்பு வரை படித்தேன். 6லிருந்து பத்தாம் வகுப்புவரை புதூர் என்ற ஊரிலே ஹாஜி இப்ராஹிம் பள்ளியில் படித்தேன். பதினொன்று பன்னிரண்டாம் வகுப்புகளை இளையாங்குடி மேல்நிலை பள்ளியில் படிச்சேன். அங்கேயே இளையாங்குடி, டாக்டர் ஜாகிர் உசேன் கல்லூரியில் இளங்கலை பொருளாதாரம் படிச்சேன். அந்தக் காலக்கட்டங்கள்ல எனக்கு விளையாட்டுல ரொம்ப ஆர்வம். அங்க அதுக்கு திடல் இருந்தது. கபடி ரொம்ப ஆர்வமா விளையாடுவேன். சிலம்பம், கராத்தேவுலயும் ஆர்வம் அதிகம். அவற்றையும் கத்துக்கிட்டேன். கிராமங்கள்ல நடக்கற கரகாட்டம், நாடகம் இதெல்லாம் தொடர்ந்து பார்த்ததும் அந்த கிராமிய கலைகளை வாசிக்க, சுவாசிக்க, நேசிக்க ஒரு கலை ஆர்வம் பற்றிக்கொண்டது.
என்னோட நண்பர்கள் பேராசிரியர்கள் ஊக்கப்படுத்தியதால் திரைத்துறைக் கலைஞனா புகழ்பெறனும்னு ஆசை வந்தது. தந்தை பெரியார், அம்பேத்கர் போன்ற மாபெரும் தலைவர்களின் தத்துவ சிந்தனையெல்லாம் என்னை ஈர்த்தன. அதே நேரம் அந்தப் பக்கம் நடந்த சாதிய ஒடுக்குமுறைகளையெல்லாம் பார்த்து, மதம் எப்படி மானுட சமூகத்தையெல்லாம் பிளந்து போடுவதென்பதை பார்த்து, ஒரு மாற்றத்தை விரும்புகிற பிள்ளையாக நேசத்தை விரும்புகிற பற்றாளனாக மாறத் தொடங்கினேன்.
அடிப்படையில் நான் தமிழனாக இருக்கும்போது தாய்ப்பாசம் எப்படி ஒவ்வொரு மனிதனுக்கும் இயற்கையாக இருக்குமோ அப்படியே மொழி, இனப் பற்றும் எனக்கும் வந்தது. சென்னைக்கு வந்து அய்யா நெடுமாறன், தலைவர் வீரமணி, அண்ணன் அறிவுமதி, அண்ணன் சுப.வீரபாண்டியன், கொளத்தூர் மணி, தோழர் தியாகு போன்ற இன உணர்வு கொண்டவர்களை சந்திக்கும் வாய்ப்பு கிட்டியது. பல்வேறு இளைஞர்களுக்கெல்லாம் பல்கலைக்கழகமாக இருக்கக்கூடிய பெரியார் திடலுக்கும் சென்று அங்கே உள்ள நூல்களையெல்லாம் வாசிக்க, என்னோட பார்வை விரிய ஆரம்பிச்சது.
அந்தக் காலக்கட்டத்தில் தன் தேச விடுதலைக்காக அண்ணன் பிரபாகரன் அவர்கள் அந்த மண்ணில் வீரம் செறிந்த அறப்போரினை நிகழ்த்திக் கொண்டிருந்தார். ஒரே தமிழ் ரத்தத்தில் பிறந்த பிள்ளைகள் என்பதால் அவரை நேசிக்கத் தொடங்கி, தமிழ் தேசிய விடுதலைக்கான போரை ஆதரிக்கத் தொடங்கினேன். இதில் என்னை முழுக்க முழுக்க ஐக்கியப்படுத்திக்கொண்டு செயல்பட்டேன். கலைத்து¬யின் வருமானத்தைவிட என் இனமானம் பெரிது என்ற நோக்கிலே நான் போராடத் தொடங்கினேன். இதில் நான் சந்தித்த இடையூறுகள், வழக்குகள் இவற்றையெல்லாம் பொருட்படுத்தாமல் நாம செத்தாலும் நம்ம இனம் வாழ்ந்தாபோதும் என்று பயணித்தேன். அந்த பயணத்தின் தொடர்ச்சிதான் இப்போதும் ஓடிக் கொண்டிருக்கிறது.
ஈழத்திற்காக குரல் கொடுத்த வைகோ, திருமா போன்றவர்களே கூட்டணி அரசியலில் சிக்குண்ட பிறகு நாம் தமிழர் இயக்கம் மட்டும் என்ன செய்து விட முடியும்?
எங்க அண்ணனுங்க செய்த பிழையை நான் செய்ய மாட்டேன். என்னால இந்த அரசியலில் ஈடுபட முடியல. பல தலைவர்களின் விரலைச் சூப்பிக் கொண்டு திரிந்த ஒரு பாசமான நாய்க்குட்டியாகத்தான் நான் இருந்தேன். என்னுடைய வருத்தம் என்னவென்றால் எல்லா அரசியல் கட்சிகளும் தங்கள் வலிமையைக் காட்ட மாநாடு கூட்டறாங்க. தங்கள் கட்சித் தொண்டர்களின் மொத்த வலிமையைக் காட்டறாங்க. ஆனா அங்கே போரை நிறுத்த இங்கே எந்த ஒரு அரசியல் கட்சியும் தங்கள் கட்சித் தொண்டர்களின் மொத்த வலிமையைக் கூட்டி ஒரு போராட்டம் நடத்தல. இந்த வருத்தம் இன்னைக்கு மட்டுமில்ல, எனக்கு என்னைக்கும் ஆறாது.
இதைத்தான் ஈழத்தில் அண்ணன் பிரபாகரன் என்னிடம் ‘‘குறைந்தபட்சம் 5 ஆயிரம் பேரைக் கூடவா திரட்டி உங்களால் போராட்டம் நடத்த முடியாது?’’ என்று கேட்டார்.
அவர் மனதில் எந்த அளவுக்கு ஆதங்கம் இருந்திருந்தால் ஒரு சிறியவன் என்னைப் பார்த்து இந்தக் கேள்வியைக் கேட்டிருப்பார். அவர் நம்பிக்கை வீண் போகாமல் இன்று பல்லாயிரக்கணக்கான இளைஞர்களை நான் திரட்டியிருக்கிறேன். எங்களால் இங்குள்ள எந்த கட்சிகளுடனும் சேர்ந்து பணியாற்ற முடியாது. நாங்க சாதி, மதம் கடந்த தமிழ்த் தேசியத்தின் பிள்ளைகள். இதை செய்வதற்கு வானத்திலிருந்து ஒரு தலைவர் வருவார்னு நாம காத்திருக்க முடியாது. திரைத் துறையிலிருந்து ஒரு தலைவர் வந்து குதிப்பார்னும் காத்திருக்க முடியாது.
வலிமையில்லாத ஏழை பாமரன் வீட்டுப் பிள்ளையா நாங்க வந்திருந்தா கூட இன உணர்வு என்ற ஒரு பெரிய வலிமை எங்ககிட்ட இருக்கு. நான் கடந்த 15 ஆண்டுகளாக தமிழ் தேசியத்திற்காக குரல்கொடுத்திருக்கிறேன். என் பால் ஈர்க்கப்பட்ட தம்பிமார்கள் இன்று என் பின்னால் அணிவகுத்து நிற்கிறார்கள்.
இறுதிக்கட்ட போர்க்காலத்தில் ஏதாவது செய்தாக வேண்டும் என்று என்னிடம் ஏராளமான தம்பிமார்கள் அழுதிருக்கிறார்கள். அப்படி ஏதாவது செய்ய வேண்டுமானால் நமக்கு வலிமை வேண்டும். அந்த வலிமை நமக்கு இருக்கிறதா என்றால் இருக்கிறது. தம்பி முத்துக்குமார் உயிரோடு இருந்தபோது அவரை யாருக்கும் தெரியாது. ஆனால் அவர் இன்னுயிரை ஈந்த பிறகு இந்த உலகில் அவரை அறியாதவர்களே இல்லை. அவர் இறுதி ஊர்வலத்தில் திரண்ட 2 லட்சத்திற்கு மேற்பட்ட இளைஞர்கள் ஏன் எந்த இயக்கத்திற்கும் போகவில்லை? நான் கலைத்துறையில் சிறியவன். என்னைவிட வலிமையானவர்கள் பின்னால் கூட ஏன் அவர்கள் அணிதிரளவில்லை?
‘‘நாம் தமிழர்’’ கூட்டத்தில் 50 ஆயிரம் பேர் கூடுகிறார்கள் என்றால் மாற்றத்தை விரும்பும் இந்த இளைஞர்களுக்கு என் முன்னோர்கள் ஏன் எந்த மாற்று வழியையும் உண்டாக்கவில்லை? நான் இந்த இயக்கம் தொடங்கவில்லை என்றால் எப்படி பல தலைவர்களையும் நம்பி நாதியற்று திரிந்தேனோ அதேபோல இவர்களும் திரிந்திருப்பார்கள்.
எனது பார்வையில் ஈழ விடுதலை என்பது நம் மக்களுக்கு மட்டுமான விடுதலை அல்ல. ஒட்டுமொத்த உலக தமிழர்களுக்கான விடுதலை.
ஒரு நாட்டை அடைந்து விட்டால் பொருளாதார விடுதலை. பெண்ணிய முன்னேற்றம் அனைத்தும் நமக்கு எளிதாக கிடைத்துவிடும். முதலில் ஈழத்தில் சாதி, மதம் ஒழிக்கப்பட்டிருந்தது. ஈழத்தில் எங்கும் தமிழ், எதிலும் தமிழ் என்ற நிலை இருந்தது. தமிழனுக்கான சட்டம், தமிழனுக்கான பாடத்திட்டம் எல்லாமே இருந்தது, இதை எவரும் மறுக்க முடியாது. எந்த நொடியிலும் அழித்தொழிக்கப்படக்கூடிய நிலையில் இருந்தபோதும் எம்மக்கள் சுதந்திரமாக இருந்தார்கள். அதேபோல திருடன், பிச்சைக்காரன் இல்லாத நாடாகவும் இது இருந்தது. இதை உலகில் யாரும் மறுக்க முடியாது.
இப்படிப்பட்ட தேச விடுதலை என்பதை ஈழ மக்களின் விடுதலை என்று தள்ளியது தவறு. தேசிய இனத்திற்கான விடுதலை, ஒவ்வொரு தமிழனுக்குமான விடுதலை. இதுதான் எங்களின் அரசியல் பார்வை. ஒரு தலைவன் தேசிய விடுதலைக்காக களமாடுகிறான். அதாவது இந்தியாவில் தமிழகனுக்கென்று ஒரு அரசு 62 ஆண்டுகளாக இருக்கிறது. எங்க அண்ணன் நடத்திய போராட்டத்தை இங்குள்ள எங்க அப்பனும், ஆத்தாளும் ஆதரிக்கவில்லை என்பதுதான் இந்த வீழ்ச்சிக்குக் காரணம். நமது இனத்திற்காக நாடு அடையும் போராட்டத்தை எமது அரசு அங்கீகரிக்கவில்லை, ஆதரிக்கவில்லை. இது ரெண்டையும் தாண்டி எதிர்ப்புத் தெரிவிச்சது. இந்திய தேசியம் எங்க போராட்டத்தை போற்றணும், பாராட்டணும். ஆனா இந்தியா எங்களுக்கு துரோகம் செய்தது. சீனா எங்களுக்கு பாரபட்சமா நடந்து கொண்டது. பாகிஸ்தான் துரோகம் செய்தது. ரஷ்யா ஏராளமான ஆயுதங்களை கொண்டு வந்து குவித்தது. எங்க அப்பனே சோறூட்டாதபோது ஊரான் வந்து சோறூட்டுவான் என்று நினைக்கிறது முட்டாள்தனம்.
போரால் மட்டும் தேசிய விடுதலையை வெல்ல முடியுமா? போராட்டமும், அசியல் புரட்சியும் சேர்ந்துதான் வெல்ல முடியும். ஆனால் போர் நடந்த அளவுக்கு அங்கே அரசியல் புரட்சியும், போராட்டமும் நடந்ததா என்றால் இல்லை. இந்த மண்ணுல மறைந்த புரட்சித் தலைவர் அவர்கள் மட்டும்தான் ஈழ விடுதலையை ஆதரிச்சது, துணை நின்றது எல்லாம். பிறகு தி.மு.க., அ.தி.மு.க. கட்சிகள் மாறி மாறி ஆண்டபோது, ஈழவிடுதலையை ஆதரிக்கவில்லை. ஜெயலலிதா எந்த முடிவெடுத்தாலும் ஆதரிக்க முன்வராத கருணாநிதி, கருணாநிதி எந்த முடிவெடுத்தாலும் ஆதரிக்க முன்வராத ஜெயலலிதா… ஒரே முடிவில் மட்டும் இரண்டு பேரும் ஒண்ணா இருந்தாங்க. அது பிரபாகரனை வீழ்த்துவதுதான். காரணம் இவர்கள் ஈழ விடுதலையை ஆதரிச்சா அந்த ஈழ விடுதலையை முன்னெடுக்கற பிரபாகரனை இவர்கள் ஏற்றுக்கொள்ளும்படி வரும். அதை இவர்கள் விரும்பவில்லை. இதனாலதான் இந்த விடுதலை வீழ்ந்துபோச்சு. அதற்குக் காரணம் இந்த அரசு. எங்களுக்கான அரசா இல்லை. இது தமிழர்களுக்கான அரசாக மாறும் வரை எதுவுமே சாத்தியமில்லை. திராவிட அரசியல் கட்சிகள் என்று தி.மு.க.வையும், அ.தி.மு.க.வையும் சொல்றோம். பிறகு தேசிய கட்சிகள். இதற்கு மாற்றாக என் மண்ணுக்கும், மக்களுக்கும் மொழிக்குமான மாற்று அரசியலை கட்டமைப்பது காலத்தின் கட்டாயம். இது சாத்தியமா, சாத்தியமில்லையா என்பதல்ல. சாத்தியத்திலிருந்து பிறப்பதில்லை எதுவும். இப்ப இது தேவை, அதை நாங்க செய்யறோம். எல்லாத்தையும் நம்பி கைவிடப்பட்ட பிள்ளைகளா நாங்க இருக்கிறதினால நிர்க்கதியா நிக்கற பிள்ளைகளை ஒன்று சேர்ப்பத்குத்தான் இந்த நாம் தமிழர் இயக்கம்.
அதேவேளை சர்வதேச இனமாக உலக அரங்கில் மாறி நிற்கின்ற எம்மினத்திற்கு சர்வதேச சமூகத்தின் வலிமை இருந்தால் எம்மினத்தை யாரும் வீழ்த்தியிருக்க முடியாது. இதுதான் நிதர்சனமான யதார்த்த உண்மை. இப்ப சர்வதேச அரசியல் கட்டமைப்பை உருவாக்க வேண்டும். இதற்கு தமிழர்கள் பெரும்பான்மை உள்ள தாயக தமிழகத்தில் அடித்தளம் இருந்தால் தான் சரியாக இருக்கும். மற்றதெல்லாம் எங்களவர் பிழைக்கச் சென்ற பூமி. அது நமது தேசமல்ல. அயலான் தேசம். இது தாய் நிலம். இந்த இடத்துல எங்க அரசியல் அடித்தளம் அமைக்க முடியுங்கிறதுல நாங்க உறுதியா இருக்கிறோம். இந்த நிலையில் உலகின் எந்த மூலையில் தமிழன் தாக்கப்பட்டாலும் அதைப் பார்த்துத் துடிக்கிற, காக்க, நினைக்கிற அரணாக இருக்கிற ஒரு அரசியல் கட்டமைப்பை இங்கதான் எழுப்பனும்னு நாங்க உறுதியா இருக்கிறோம்.
முதலில் தமிழனுக்கான அரசியல் வலிமையையும், தளத்தையும் உருவாக்க வேண்டும் என்பதுதான் எங்களது நோக்கம். உலகெங்கும் இருக்கிற தமிழர்களை முதலில் தமிழர்களாக்க வேண்டும். அப்ப தமிழர்கள் அனைவரும் தமிழர்கள் இல்லையா என்றால் இல்லை. இந்தோனேஷிய தமிழர், இந்திய தமிழர், ஈழத் தமிழர் என்று பலவகையான தமிழர்களாக உள்ளனர். இதைத் தாண்டி கட்சித் தமிழன், மதத் தமிழன், சாதித் தமிழன்னு பல பல பேர் இருக்கிறார்கள். இவர்களை ஒன்று திரட்டி அனைவரும் ஒரே தமிழர் என்று காட்ட வேண்டிய தேவை எங்களுக்கு இருக்கிறது.
தேர்தலுக்காக எங்கள் கொள்கைகளை சமரசம் செய்பவர்கள் நாங்கள் இல்லை. அப்படி தேர்தலில் நின்று வென்றாக வேண்டிய அவசியம் எங்களுக்கு இல்லை. இதற்காக தேர்தலையே புறக்கணிக்க மாட்டோம். தேர்தலில் நிற்போம். ஆனால் 2011 வருடம் தேர்தலில் நிற்க மாட்டோம். எங்கள் இலக்கு 2016 தான். வென்றுவிட முடியும் என்கிற வலிமை எங்களுக்கு வந்துவிடும் வரை தேர்தலைப் பற்றி சிந்திக்கப்போவதில்லை. நிறைவாகும் வரை மறைவாக இரு என்ற காசி ஆனந்தன் அய்யாவின் கவிதைப்போல சிறகை விரி பிறகு சிரி. நல்ல பாய்ச்சலுக்காக பசியோடு இருக்கும் புலியைப்போல நாங்கள் காத்திருப்போம். அந்த பாய்ச்சல் வரை பதறாமல் இருப்போம். சிதறாமல் இருப்போம். நாம் மக்களோடு மக்களாக கலப்போம். இது ஒரு நீண்ட கால செயல்திட்டம். 4 சீட்டு வாங்கிக்கொண்டு தேர்தலில் நிற்கும் வேலையே இங்கு இல்லை. அப்படிப் பார்த்துப் பார்த்துதான் விரக்தியுற்று இந்த வேலையைத் தொடங்கினோம்.
ஈழத்திற்குக் குரல்கொடுக்கும் நீங்கள், ஏன் அந்தக் கொடுமையை ஒரு மாபெரும் திரைக் காவியமாக படைக்கக்கூடாது?
ஈழப் பிரச்சனையை கற்பனையாக எடுக்க முடியாது. அது ஒரு வரலாற்று நிஜம். நான் அண்ணன் பிரபாகரனைச் சந்திக்கச் சென்றபோது அவர் என்னை படம் எடுக்கச் சொல்லவில்லை. அதிலுள்ள அரசியல் சிக்கல்கள் அவருக்குத் தெரியும். பென்ஹர், ஷிண்லர்ஸ்லிஸ்ட், பிரேவ் ஹார்ட் மாதிரிதான் வரலாற்றுப் படங்களை உண்மையாக நாங்க எடுக்கணும்.
ஒரு போராளி எப்படி உருவானான் என்பதையே ஒரு படமாக எடுக்கலாம். அந்த நாட்டை சிதைத்துவிடக்கூடிய ஒரு அரசியல் சூழ்நிலை இருக்கும்போது எப்படி அதனை படம் எடுப்பது? காற்றுக்கென்ன வேலி சிதைக்கப்பட்டுத்தானே வெளிவந்தது. ‘ஆணிவேர்’, ‘எள்ளாளன்’ போன்ற திரைப்படங்களை இந்தியாவில் வெளியிட முடிந்ததா? இந்த சூழ்நிலையில் நான் புலிகளின் ஆதரவாளன். என்னால் எப்படி இந்த படத்தை எடுக்க முடியும்? அதே நேரம் அரசியல் சூழ்நிலை மாறும்போது அப்படி ஒரு படத்தை எடுப்பேன். அதுவரை நான் இயக்கும் படங்களில் என்னால் முடிந்தவரை அதற்கான குரல்களை பதிவு செய்வேன்.
பிரபாகரனை வன்முறையாளன் என்கிறார்கள். அப்படியென்றால் எம்மினத்தையே அழித்த இராஜபக்சே யார்? ஒரு தேசத்தில் இருக்கும் இரு இனங்களில் ஒரு இனத்திலிருந்து மட்டும் ஒருவரைக்கூட சேர்க்காமல், அதை தேசிய இராணுவம் என்றால் அதை எப்படி ஏற்றுக்கொள்ள முடியும்? அவன் நாட்டில் வேண்டுமானால் நாம் சிறுபான்மையினர். ஆனால் 50,000 வருடங்கள் வரலாறு கொண்ட எம்மினம் உலகத்தில் பெரும்பான்மை. எம்மினத்தவர் ஒருவர்கூட இல்லாத இராணுவம் எம்மினத்தவரை எப்படி பாதுகாக்கும் என்னும் கேள்விக்கு உலக அரங்கில் எந்த பதிலுமில்லை.
இந்த இராணுவத்தினால் பாதிக்கப்படுகிற மக்களை பாதுகாக்க விடுதலைப்புலிகள் இயக்கம் கடமைப்படுகிறது. இந்த இயக்கத்தை பயங்கரவாதம் என்பதை எந்த வகையில் ஒத்துக்கொள்வது?
அடிக்க ஓங்குகிற கைகளுக்கும் அதை தடுக்கும் கைகளுக்கும் வித்தியாசம் இருக்கிறது. இதய நோய்க்கான அறுவைச்சிகிச்சை என்பது வன்முறை அல்ல… சிகிச்சை.
‘சைலன்ஸ்’ என்ற வார்த்தையைக்கூட இங்கு சத்தமாகத்தான் சொல்ல வேண்டியிருக்கிறது. வன்முறைக்கு எதிரான தாக்குதல் அந்த வன்முறையைவிட பலமாக இருந்தால்தான் இங்கே வெல்ல முடியும். இப்படியான உரையாடல்களையும், நான் தம்பி படத்தில் வைத்திருந்தேன். இப்படித்தான் குறியீடாக எதையும் சொல்ல முடியுமே தவிர, முழுநீளத் திரைப்படமாக எடுக்கும் அரசியல் சூழல் இங்கு இல்லை.
1980 களில் தொடங்கி, 2000 வரை திராவிடம் மற்றும் தமிழ்தேசிய களத்தில் நின்றவர்கள் காயடிக்கப்பட்டார்கள் என்பதுதான் உண்மை. ஒரு தலைமுறையே காணாமல் போய்விட்டது. இன்றைய ஐ.டி. யுகத்திலும் இந்தத் தலைமுறையைச் சேர்ந்த ஏராளமான இளைஞர்கள் உங்களுக்காக நிற்கிறார்களே… அவர்களின் எதிர்காலம்?
உண்மைதான். இந்த இளைஞர்களுக்கு முதலில் நாங்கள் பயிற்சிதான் அளிக்கப்போகிறோம். நாங்கள் கருத்துப் புரட்சிக்கான ஒரு படையை உருவாக்கப் போகிறோமே தவிர ஆயுதப் புரட்சிக்காக அல்ல. இலஞ்சம் தேசியமயமாக்கப்பட்ட ª£ரு நாட்டிலே நாம் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். அது எப்படி இந்த நாட்டின் பொருளாதாரத்தையே பாதிக்கிறது என்பதை நாம் புரிந்துகொள்ள வேண்டும். சாதியைப் பற்றி கவலைப்படுகிற தமிழன் இந்த இலஞ்சத்தைப் பற்றி முதலில் கவலைப்படவேண்டும். என் மண்சார்ந்த இலக்கியம், விளையாட்டு பயிற்றுவிக்கப்பட வேண்டும். அதற்கும் மேல் மது, புகையிலை போன்ற தீய பழக்கங்களுக்கு அடிமையாகாமல், ‘‘உடல் என்பது ஒரு நுட்பமான தொழிற்சாலை, அதைப் பேணிக் காப்பவனே உண்மையான பகுத்தறிவுவாதி’’ என்று பெரியார் சொன்னதை கடைப்பிடிக்க இளைஞர்களுக்காக உடற்பயிற்சி நிலையங்கள் அமைப்போம். எங்கள் இயக்கத்திலுள்ள அறிஞர்களைக் கொண்டு, எம்மினம் எப்படி வாழ்ந்தது, எப்படி வீழ்ந்தது என்று பயிற்சி பட்டறை மூலம் வகுப்பெடுப்போம். இப்படி அவர்களை முழுமையாக தயார் செய்த பிறகு ஒவ்வொரு வீட்டிற்கும் ஒரு புரட்சியாளனை உருவாக்குவோம். முதலில் வீட்டை வென்றெடு, பிறகு நாட்டை வென்று எடுக்கலாம். முதலில் என் தாய் என்னை உண்மையானவன், நேர்மையானவன் என்று நம்பணும். என் சகோதர, சகோதரிகள் நம்பனும். ஓட்டுக்காக காசு கொடுக்க வருபவனை நானும் என் குடும்பத்தாரும் சேர்ந்து தடுக்கணும். இப்படித்தான் உண்மையான ஜனநாயகம் தழைக்க முடியும். மார்க்ஸ், ஏங்கல்ஸ், பெரியார், பாரதி, பாரதிதாசன், பெருஞ்சித்தனார், தேவநேயப் பாவாணர் போன்ற தலைவர்களின் சிந்தனைகளை இன்றைய தலைமுறையினரிடம் கொண்டு சேர்த்து அவர்களை வார்த்தெடுத்த பிறகுதான், தேர்தல் களத்தைச் சந்திப்போம். இப்போது வாரித்தூற்றும் வேலை நடைபெற்றுக்கொண்டிருக்கிறது. பதர்கள் போக கடைசியில்தான் விதைகள் மிச்சமிருக்கும். அப்போது எங்களுடன் 10,000 பேர் இருந்தால் போதும், இந்த சமூகத்தை மாற்றி அமைக்க.
பார்வதி அம்மாளுக்கு நேர்ந்த அவமானம் குறித்து…
அவர்களுக்கு விசா தராமல் மறுத்திருந்திருந்தால் அது செய்தியே அல்ல. இங்கு அம்மா வருவது எனக்குத் தெரியாது. அன்று நான் திருப்பூரில் பரப்புரையில் இருந்தபோது என்.டி.டி.வியில் பணியாற்றும் ஒரு தம்பி, ‘அம்மா இங்கு வரப்போகிறாராமே’ என்று கேட்டார். அன்று நள்ளிரவே அம்மா இங்கு வந்துவிட்டார். ஒரு தொலைக்காட்சி நிருபருக்கு தெரிகிற செய்தி, இந்த நாட்டின் முதலமைச்சருக்கு தெரியவில்லை.
6 மாசம் விசா கொடுத்த தேசம் திருப்பி அனுப்பியது என்ன சட்டம்? இப்போது அம்மாவிடம் கடிதம் வாங்கி இருக்கிறார்கள். கடிதம் கொடுத்தால் உங்கள் சட்டம் அனுமதிக்குமா? நம் ஜென்ம பகை நாடான பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர் வாசிம் அக்ரம் பொண்டாட்டிக்கு ஒரு சட்டம், என் அம்மாவிற்கு ஒரு சட்டமா?
சிங்களவன் சுடுவான் நாங்கள் கேட்க மாட்டோம். ஈழத்துல சிங்களவன் கொல்லுவான், நாங்க ஒண்ணும் செய்ய மாட்டோம். பிரபாகரன் அம்மாவை உங்க அம்மான்னு நினைச்சுட்டீங்களா? நீங்க என்ன கத்தினாலும் ஒண்ணும் செய்ய மாட்டோம். தமிழர்கள் இந்திய அடிமைகள் என்பதை உணர்த்தும் செயல்தான் இது.
நிற்க வைத்து ஒவ்வொரு தமிழனின் முகத்திலும் காறி உமிந்ததைப்போன்ற செயல்தான் இது.
கடிதம் காட்டினால் கருணைக்காட்டும் என் தேசம் என்ன சொல்கிறது… கெஞ்சு, மண்டியிடு, உங்களை கொல்வதென்றாலும் நாங்கள்தான், அதுபோல உங்களைக் காப்பாற்ற வேண்டுமென்றாலும் நாங்கள்தான் வேண்டும் என்கிறது.
அந்தத்தாய் இங்கு வந்தால் தமிழ்நாடே திரண்டு வந்து அவரைப் பார்க்கும்… வீணாண சலசலப்பு ஏற்படும். அதற்கு பயந்துதான் அவருக்கு அனுமதி இல்லை என்றிருக்கிறார்கள். சுயநினைவே இல்லாத அவர்களை மீண்டும் இங்கு அழைத்துவந்து யாரும் அவரைப் பார்க்க அனுமதி அளிக்காமல், அவரை மருத்துவமனையில் வைத்து பிரபாகரன் தாயை காப்பாற்றியது நாங்கள்தான், நாங்களா ஈழத்தமிழர்களுக்கு துரோகம் செய்தோம் என்கிற அரசியல் செய்யவே திட்டம் தீட்டப்பட்டுள்ளது.
சீமானின் அடுத்த படைப்பு?
கலைப்புலி தாணு தயாரிக்க என் தம்பி விஜய் நடிக்க நான் இயக்கும் படம் ‘பகலவன்’, இது இரண்டு மடங்கு தம்பியாக இருக்கும்.
ஈழம் எரிந்து ஓராண்டு முடியப்போகிறதே, பிரபாகரன் எங்கிருக்கிறார்?
இவ்வளவு பெரிய போராட்டத்தை அவர் விட்டுவிட்டுப் போகமாட்டார் என்பது என் ஆழ்மனத்தின் அசைக்க முடியாத நம்பிக்கை. அதை என் உள்ளுணர்வு சொல்கிறது. அதுதான் இப்படி என்னை இயங்க வைக்கிறது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக